நரகத்தில் வாடும் பெண்கள்
ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள் :-
ஒரு நாள் நானும், ஃபாத்திமா (ரலி) யும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க அவர்கள்
சமூகத்திற்கு சென்றிருந்தோம். அப்போது கண்மணி நபி (ஸல்) அவர்கள் அழுது
கொண்டிருந்தார்கள்.
தந்தையின் அழுகையைப் பார்த்த ஃபாத்திமா
(ரலி) அவர்களுக்கு கண்களில் கண்ணீர் கொப்பளித்து துடி துடித்துப் போய் எனதருமை
தந்தையே! தாங்கள் அழுது கொண்டிருக்க காரணம் யாது?' என்று கேட்டார்கள்.
எனதருமை
மகளே! நான் மிஃராஜ் சென்றிருந்த போது நரகத்தில் வேதனை செய்யப்படும் பெண்களைப் பார்த்தேன். அவர்களை வேதனை செய்யப்படுவதற்கான
காரணத்தையும் எனக்கு விவரிக்கப்பட்டது. அந்த காட்சியை நினைத்து அழுது
கொண்டிருக்கிறேன்' என்றார்கள்.
உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள்
எனதருமை தந்தையே வேதனை செய்யப்படும் பெண்களைப் பற்றி எனக்கு விபரமாக கூறுங்கள்' என்று வேண்டிக் கொண்டார்கள்.
கருணை நபி (ஸல் )
அவர்கள் சொல்லத் துவங்கினார்கள்.
1. ஒரு பெண்மணி அவளின் கூந்தலைப்
பிடித்து இழுத்துக் கட்டித் தலைகீழாக தொங்க விடப்பட்டிருக்கிறாள். கீழே எரிந்து
கொண்டிருக்கும் நெருப்பின் சூட்டினால் அப் பெண்ணின் மூளை கொதித்து வடிந்து கொண்டிருக்கிறது.
2. மற்றொரு பெண்மணி அவளின் நாக்கை
வெளியே இழுத்து அதனால் கட்டி தொங்க விடப்பட்டு அவளின் இரு கைகளும் பின்புறமாக
கட்டப்பட்டிருக்கின்றன. அவளின் கொழுப்பு உருகி வாயின் வழியாக வழிந்து
கொண்டிருக்கிறது.
3. இன்னொரு பெண்மணி அவளின் இரண்டு
மார்புகளும் முதுகின் பக்கம் இழுக்கப்பட்டு அதனால் கட்டி தொங்க
விடப்பட்டிருக்கிறாள். திருகுகள்ளி செடியின் சாறு அவளின் வாயின் வழியாக
ஊற்றப்படுகிறது.
4. மற்றொரு பெண்மணி அவளின் இரு
கைகளும் கால்களும் முன் நெற்றி ரோமத்தால் (நெற்றி முடி) கட்டப்பட்டு தொங்கவிடப் பட்டிருக்கிறாள். பெரிய பெரிய
பாம்புகள் தேள்களும் நட்டு வாக்கலிகளும் அவளை கொத்திக் கொண்டிருக்கின்றன.
5. இன்னொரு பெண்மணி அவள் தனது
உடம்பையே கடித்து தின்று கொண்டிருக்கிறாள்.
6. மற்றொரு பெண்மணி அவளின் உடலை
நெருப்பின் கத்தரிகோலால் துண்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
7. மற்றொரு பெண்மணி அவளின் முகம்
மிகமிக கருப்பாக கருத்து இருக்கிறது. அவள் தனது குடலை உருவித் தின்று
கொண்டிருக்கிறாள்.
8. இன்னும் ஒரு பெண்மணி
செவிடாகவும், குருடாகவும், ஊமையாகவும் இருக்கிறாள். அவளை நெருப்புப் பெட்டியில்
வைத்து பூட்டப்பட்டிருக்கிறது. அவளின் மூளை உருகி மூக்கின் வழியாக வழிந்து
கொண்டிருக்கிறது. அவளின் மேனியெல்லாம் கருங்குஷ்டத்தாலும், வெண்குஷ்டத்தாலும் பொத்து வடிந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.
9. மற்றொரு பெண்மணி அவளின் தலை
பன்றியின் தலையைப் போன்றும், உடல் கழுதையின் உடல் போன்றும் இருக்கிறது. அவள் மீது
இலட்சோப லட்சம் வேதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
10. இன்னொரு பெண்மணி நாயின் உருவத்தில் இருக்கிறாள். அவளின் வாயின் வழியாகவும், முன் துவாரத்தின் வழியாகவும் பாம்புகளும், தேள்களும் உள்ளே நுழைந்து பின் துவாரத்தின் வழியாக
வெளியேறிக் கொண்டிருக்கின்றன. மலக்குகள் நெருப்பு சம்பட்டியால் அவளின் தலைமீது
அடித்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதனைகளை சொல்லி முடித்தார்கள்.
அனைத்தையும் மௌனமாகக் கவலையாகக்
கேட்டுக் கொண்டிருந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள் தேம்பித் தேம்பி அழுது கண்ணீர்
வடித்துக் கதறினார்கள். எனது அருமை தந்தையே! என் இரு கண்களின் குளிர்ச்சியே! மேற்கண்ட
பெண்மணிகள் செய்த தவறுகள் என்ன? என்பதை தங்கள்
மகளுக்கு விளக்கி சொல்வீர்களேயானால் அக்குற்றங்களை விட்டும் நீங்கிக்கொள்ள எனக்கு
ஒரு வாய்ப்பாக இருக்குமே, சொல்லுங்கள்' என்றார்கள்.
இப்போது கண்மணி நபி
(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள் :-
1. கூந்தலை இழுத்து தலைகீழாக
கட்டப்பட்டவள் தனது கூந்தலை அன்னிய ஆடவர்கள் முன் மறைக்காதவள்.
2. நாக்கை வெளியே இழுத்துக் கட்டப்பட்டவள்
தனது கணவனை நாவால் திட்டி ஏசித் துன்புறுத்தியவள்.
3. இரு மார்புகளையும் முகுகின்
பக்கம் தொங்கவிடப்பட்டவள் தனது கணவனின் அனுமதியின்றி அந்நிய குழந்தை களுக்குப்
பால் கொடுத்தவள்.
4. கால், கைகளை முன் நெற்றி ரோமத்தால் கட்டி தொங்க விடப்பட்டவள் தொழவும், நோன்பு நோற்கவும் வசதி இருந்தும் கூட
அவைகளை நிறைவேற்றாதவள். மேலும் பெருந்துடக்கை (மாதவிடாய்) நீக்கக் குளிக்காமல் இருந்தவள். கணவனின் உத்தரவு இன்றி வெளியே சென்றவள்.
5. தனது உடம்பை கடித்துத் தின்று
கொண்டிருந்தவள் புறம் பேசித் திரிந்தவள்.
6. தன் உடம்பு நெருப்பு
கத்தரிக்கோலால் துண்டிக்கப்பட்டவள் தனது உடம்பை அலங்கரித்து பிறருக்கு காட்டித் திரிந்தவள்.
7. தன் முகம் கருத்து தனது குடலைத்
தின்றவள் பிற பெண் களின் குற்றங்குறைகளை அறிந்து அம்பலப் படுத்தியவள்.
8. செவிடாகவும், குருடாகவும், ஊமையாகவும் இருப்பவள் தடுக்கப்பட்ட விஷயங்களைக்
கேட்டும் அன்னிய ஆடவர்களையும் பார்த்தும் மேலும் பொய் பேசி திரிந்தவள்.
9. பன்றியின் தலை போன்றும்
கழுதையின் உடல் போன்றும் இருந்தவள் கோள் மூட்டுகிறவளாகவும் பொய் பேசித்
திரிகிறவளாகவும் இருந்தவள்.
10. நாயின் உருவில் இருந்தவள் குழப்பக்காரியாகவும், கணவனிடம் கோபமாக பேசக்கூடியவளாகவும் மேலும் வேசியாகவும் இருந்தவள்.
படிப்பினை :-
தீன்குலப்
பெண்மணிகளே !
இதைவிட வேறொரு படிப்பினை
நிகழ்ச்சி வேண்டுமா ?
நரக வேதனையை விட்டும்
தப்பிக்கும் வழிகளைப் படித்து விட்டீர்கள். அதிலிருந்து எப்போது தப்பிக்க முயற்சி
எடுக்கப் போகிறீர்கள்? நபி (ஸல்) அவர்கள் நேரில் கண்ட காட்சி நமக்கு பெரும்
பாடமாகும்.
ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள்
ஃபாத்திமா (ரலி) அவர்களைப் பார்த்து, 'ஓ ஃபாத்திமா உனது உயிரை நரகத்திலிருந்து காப்பாற்று!' ஏனெனில் நான் அல்லாஹ்விடம் உனக்காக எவ்வித உதவியும் செய்ய முடியாதவனாக
இருக்கிறேன்' என்று
எச்சரித்துள்ளார்கள்.
ஃபாத்திமா (ரலி)க்கு இந்த நிலை
என்றால் நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எம்மாத்திரம் ? ஈமான் சாலிஹான அமல்கள் (நன்மைகள்) இன்றி நாம் யாரின் உதவி மூலமும் சுவர்க்கம் போக
முடியாது. எச்சரிக்கை ! இஸ்லாமிய பெண்களே! எச்சரிக்கை.